இலங்கை வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ்க் கத்தோலிக்க ஆயர்கள் ஒன்றியம் தமிழக முதல்வர் மரியாதைக்குரிய மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு கடந்த மாதம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அக்கடிதத்தில் கடந்த 27.08.2021 அன்று நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ் நாட்டில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக அவர் ஆற்றிய உரை இலங்கையில் வாழ்கின்ற அனைத்துத் தமிழர்களுக்கும் புதிய உத்வேகத்தையும் மகிழ்சியும் தந்துள்ளதை சுட்டிக்காட்டி, “இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்கள்” இனிவரும் நாட்களில் “இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள்” என்று அழைக்கப்படுமெனக்கூறி அரசாணை பிறப்பித்து அவர்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்குத் தேவையான வீடு, உட்கட்டமைப்பு வசதிகளாகிய குடிநீர், மின்சாரம், கழிப்பிட வசதிகள், பொறியியல் கல்வி மற்றும் கல்விக்கான ஊக்குவிப்புத் தொகை, வேலைவாய்ப்பு, வாழ்க்கைத்திறன் போன்ற நலத்திட்டங்களையும் அறிவித்துள்ளமையானது, துயரங்களை அனுபவித்த மக்களுக்கு மிகுந்த ஆறுதலையும், மகிழ்வினையும் கொடுத்துள்ளதை குறிப்பிட்டுள்ளனர்.

இதற்காக அவர்களுக்கும், அவர்;களது அரசிற்கும் நன்றிதெரிவித்த ஆயர் ஒன்றியம், தொடர்ந்தும் தமிழகத்திலேயே வாழ விரும்புகின்றவர்களுக்கான நிரந்தர இந்தியக் குடியுரிமையினைப் பெறுவதற்கான வழிவகைகளைச் செய்து கொடுப்பதுடன் இலங்கையில் தங்களது சொந்த வாழ்விடங்களில் மீளக்குடியேற விரும்புகின்றவர்களுக்கு மீளக்குடியேற்ற முயற்சிகளை முன்னெடுத்து, அவர்களை பாதுகாப்பான முறையில் அவ்விடங்களில் குடியேற்றுவது போன்ற மேலும் இரண்டு விடயங்களில் அவர்களின் அரசு கவனம் செலுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். அத்துடன் இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் நடைபெற்ற கொடிய இனச்சுத்திகரிப்பு யுத்தத்தின் வடுக்களால் சொல்லொண்ணா துன்பங்களுடன் வாழ்கின்ற மக்களிள் துயர்துடைப்பு பணிக்கும் உதவ வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ள அயர் ஒன்றியம் இலங்கையில் புரையோடிப் போயுள்ள இலங்கைத் தமிழர்களின் இனப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வினை எட்டுவதில் 1987ஆம் ஆண்டில் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தால் எட்டப்பட்ட வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சியுடன் கூடிய மாகாண அமைப்பு முறைமை வலுப்பெற இந்திய மத்திய அரசுக்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin