வன்னியில் இனஅழிப்பு யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்கு சென்ற திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதி பேரருட்தந்தை பிறைன் உடேக்குவே அவர்கள் முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலய வளாகத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த இடத்தில் யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
 
26ஆம் திகதி கடந்த புதன்கிழமை முல்லைத்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருத்தந்தையின் திருத்தூது பிரதிநிதியுடன் யாழ். மறைமாவட்ட ஆயர், குருக்கள் மற்றும் பாதிக்கப்ட்ட மக்கள் அனைவரும் இணைந்து படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு சுடர்களைஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
 
அஞ்சலி நிகழ்வை தொடர்ந்து திருத்தந்தையின் பிரதிநிதி அவர்கள் பதிக்கப்பட்ட மக்களுக்கு உலர்உணவுப்பொதிகள் வழங்கிவைத்து அவர்களுடன் உரையாடி தமது தோழமை உறவை வெளிப்படுத்தி திருத்தந்தையின் ஆசீரை வழங்கினார்.
 
தொடர்ந்து முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தை பார்வையிட்டு முல்லைத்தீவு புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்ற நற்கருணை ஆராதனையிலும் பங்கெடுத்து நற்கருணை ஆசீரை வழங்கினார்.

By admin