2009ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி தமிழினம் எதிர்கொண்ட பேரழிவின் நினைவுகளை முன்னிறுத்தியும், ஆயுத போருக்கு பின்பும் தமிழர் தாயக பகுதியில் திட்டமிட்ட முறையில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இன அழிப்பு செயற்பாடுகளை சாத்வீக ரீதியாக எதிர்ப்பதன் அடையாளமாகவும் மே மாதம் 18 ஆம் திகதியன்று அனைவரும் ஒன்றிணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுக்கும்படி யாழ் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு அழைப்பு விடுத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் மண்ணில் நடந்த இன அழிப்பு யுத்தத்தில் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டும் அங்கவீனப்படுத்தப்பட்டும் உறவுகளை பறிகொடுத்தும் சொல்லெண்ணா வலிகளை அனுபவித்தார்கள். இம்மாதத்தில் மக்கள்பட்ட துன்பங்களை நினைவுகூர்ந்து அவர்களின் இழப்புக்களுக்கு நீதி வேண்டி குரல் கொடுப்பது எம் எல்லோருடைய தார்மீக கடமையாகும்.
அத்துடன் எமது மக்கள் கடந்து வந்த நினைவுகளை தக்கவைக்க முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு பல இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிகழ்வை குழப்பும் செயற்பாடுகளில் இராணுவ புலனாய்வினர் ஈடுபடுவது எமக்கு மிகவும் மனவருத்தத்தை தருகிறது. அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வு இழுத்தடிப்பு, சிங்கள பௌத்தமயமாக்கல், தொல்பொருள் திணைக்களத்தின் பக்கசார்பான செயற்பாடுகள் மேலும் பேச்சுவார்த்தை என்னும் பொறிக்குள் நடைபெறும் ஏமாற்று வித்தைகள் போன்றவை இனஅழிப்பின் இன்னொரு முகத்தை எமக்கு காட்டி நிற்பதுடன் அரசின் மீது நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே இவற்றை சாத்வீக ரீதியாக எதிர்ப்பதன் வெளிப்பாடாகவும் இந்நினைவேந்தல் நிகழ்வை நாம் முன்னெடுக்க வேண்டுமென இவ்அறிக்கையில் மேலும்கூறப்பட்டுள்ளது.
நினைவேந்தல் நிகழ்வுகளில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு தமது ஆதரவைத் தெரிவித்து அவர்களின் செயற்பாடுகளுக்கு மக்களும் அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்ளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் இவ்வறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் மே 18ஆம் திகதி காலை 8 மணிக்கு முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலயத்தில் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளதுடன் இத்திருப்பலியில் இயலுமானவர்கள் கலந்து கொள்ளும் படியும் கலந்து கொள்ள இயலாதவர்கள் தமது ஆலயங்களில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுகளில் ஒண்றிணைந்து இறைவேண்டல் செய்து எமது சாத்வீக ரீதியான எதிர்ப்பை அரசுக்கு வெளிப்படுத்தவும் இவ்அறிக்கையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

By admin