30வது உலக நோயுற்றோர் தினத்தை முன்னிட்டு. “உலக நோயுற்றோர் தினம் பொருள், இலக்குகள் மற்றும் சவால்கள்” என்ற தலைப்பில், மனித ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான திருப்பீட அவையால் ஏற்பாடு செய்யப்பட்ட வலைத்தள கருத்தரங்கில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இணைந்து உரையாற்றினார்.

நோயின் அனுபவம் நம்மை பலவீனப்படுத்துவதுடன், அது மற்றவர்களின் தேவையையும் உணர வைக்கிறது என்றும், நோய் வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றிய கேள்வியை எழுப்புகிறது என்றும் கூறிய திருத்தந்தை, அக்கேள்வியை, நாம் நம்பிக்கையில் கடவுளுக்கு முன் கொண்டு வந்து அதற்கான விடையைத் தேடவேண்டும் என்று கூறினார். மேலும், நோயுற்றவர்களைக் கவனித்துக்கொண்ட புனிதர்கள், எப்பொழுதும் உடல் மற்றும் ஆன்மாவின் காயங்களை குணப்படுத்துங்கள்; உடல் மற்றும் ஆன்மிக சிகிச்சைக்காக ஒன்றாக இறைவேண்டல் செய்து செயல்படுங்கள் என்ற தங்கள் தலைவரின் போதனைகளை மறக்கவில்லை என்றும் தெரிவித்த திருத்தந்தை, அத்தகைய மனநிலையை நாமும் கொண்டிருக்கவேண்டியது அவசியம் என்பதையும் சுட்டிக்காட்டினார். தனிநபர்வாதம், பிறரை அலட்சியப்படுத்துதல் ஆகியவை சுயநலத்தின் வடிவங்களாகும் என்றும், இது எதிர்பாராதவிதமாக நுகர்வோர் நலன் மற்றும் பொருளாதார தாராளமயம் ஆகியவற்றால் சமுதாயத்தில் வளர்க்கப்பட்டு, அதன் விளைவாக நலவாழ்வு துறையில்கூட ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகின்றன என்று எச்சரித்த திருத்தந்தை பிரான்சிஸ், அங்குச் சிலர் சிறப்புச் சலுகையை அனுபவிக்கிறார்கள் என்றும், பலர் அடிப்படை சுகாதாரத்தைக் கூடப் பெறமுடியாமல் போராடுகிறார்கள் என்றும் தன் வருத்தத்தைப் பதிவு செய்தார். திருஅவை, மனிதகுலத்தின் நல்ல சமாரியர் இயேசுவைப் பின்பற்றி, துன்பப்படுபவர்களுக்காக எப்போதும் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது என்றும், தனிப்பட்ட, மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டிலும் நோயாளிகளுக்காக பெரிய வளங்களையும் வசதி வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறது என்று விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ், ஒருங்கிணைந்த மனிதப் பாதுகாப்புக்கான இந்தத் தொழிலும் பணியும், இன்று சுகாதாரத் துறையில் புதுமையான விடயங்களை புதுப்பிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

By admin