மருதமடு அன்னையின் திருச்சுருபம் யாழ். மறைமாவட்ட பங்குகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டு அன்னையின் திருயாத்திரை நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் அன்னையின் திருச்சுருபம் அன்னையின் இருப்பிடமாகிய மடுத்திருத்தலத்திற்கு கடந்த 30ஆம் திகதி கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

அன்னையின் திருச்சுருபம் மாங்குளம் பங்கிலிருந்து யாழ். மறைமாவட்ட திருயாத்திரையின் இறுதி ஆலயமாகிய மல்லாவி புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு மக்கள் வணக்கத்திற்காக வைக்கப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

திருப்பலியின் பின் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களினால் வழங்கப்பட்ட திருச்சுருப ஆசீரை தொடர்ந்து திருச்சுருபம் வெள்ளாங்குளம் சந்திக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர், மறைமாவட்ட குருமுதல்வர், யாழ். மன்னார் மறைமாவட்ட குருக்கள், அருட்சகோதரிகள் பொதுநிலையினரென பலரும் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து வெள்ளாங்குளம் சந்தியிலிருந்து அன்னையின் திருச்சுருபம் மன்னார் மடுத்திருத்தலத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு மடுத்திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அவர்களிடம் கையளிக்கப்பட்டு மன்னார் மறைமவாட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ அவர்களின் தலைமையில் நன்றித்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

By admin