மே 17, கடந்த ஞாயிறு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும், Laudato Sí வாரத்தை முன்னிட்டு, உலகளாவிய கத்தோலிக்க காலநிலை இயக்கம், இணையதளம் வழியாக, ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில், படைப்பைப் பாதுகாப்பது வழிபாட்டுடன் எவ்வாறு தொடர்புகொண்டிருக்கிறது என்பது பற்றி விளக்கினார், கர்தினால் டர்க்சன்

மேரி தெரேசா : வத்திக்கான் செய்திகள்

ஐந்து ஆண்டுகளுக்குமுன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட, இறைவா உமக்கே புகழ் என்று பொருள்படும் Laudato si’ திருமடல், எவ்வாறு அதன் இணை தலைப்பைப் பெற்றது என்பது பற்றி, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் விளக்கியுள்ளார்.

கத்தோலிக்கத் திருஅவையில், மே 17, கடந்த ஞாயிறு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும், Laudato Sí வாரத்தை முன்னிட்டு, உலகளாவிய கத்தோலிக்க காலநிலை இயக்கம், இணையதளம் வழியாக, ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில், படைப்பைப் பாதுகாப்பது வழிபாட்டுடன் எவ்வாறு தொடர்புகொண்டிருக்கிறது என்பது பற்றி, கர்தினால் டர்க்சன் அவர்கள் எடுத்துரைத்தார்.

அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களின், படைப்பு குறித்த கண்ணோட்டம் பற்றியும் விளக்கிய கர்தினால் டர்க்சன் அவர்கள், Laudato si’ திருமடலின் இரண்டாவது பிரிவு, படைப்பின் இறையியல் என அழைக்கப்படுகின்றது என்றும், நாம் அனைவரும் சகோதரர், சகோதரிகள் என்ற முறையில், படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களோடும் உறவைப் பகிர்ந்துகொள்கிறோம் என்றும் கூறினார்.

படைப்பின் நற்செய்தி, சூழலியலுக்கு கிறிஸ்தவத்தின் வழிகாட்டல், படைப்பு, வழிபாட்டுடன் கொண்டிருக்கும் தொடர்பு, இந்தப் பூமி, இக்காலத்திலும், வருங்காலத்திலும் வாழ்கின்ற எல்லாருக்கும் சொந்தமானது, படைப்பு, தியானத்திற்கு அழைத்துச் செல்கிறது, படைப்பு, கடவுளின் பிரசன்னத்தை வெளிப்படுத்துகிறது, சகோதரர், சகோதரிகளாக, படைப்போடு நமக்குள்ள தொடர்பு போன்ற தலைப்புக்களில், கர்தினால் டர்க்சன் அவர்கள், அக்கருத்தரங்கில் பகிர்ந்துகொண்டார்.

படைப்பின் நற்செய்தி

படைப்பின் நற்செய்தி பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள விளக்கம் பற்றி எடுத்துரைத்த, கர்தினால் டர்க்சன் அவர்கள், நற்செய்தி என்பதே, கடவுளின் வியத்தகு பணிகளை அறிவிப்பதாகும் என்றும், மீட்பு பற்றியோ அல்லது, மனிதரின் நலவாழ்வு பற்றியோ, யாராவது ஒருவர் எடுத்துரைக்கும் போதெல்லாம், அவர், படைப்பில் கடவுளின் வேலைப்பாடுகள் பற்றியே பேசுகிறார் என்றும் கூறினார்.

அசிசி நகர் புனித பிரான்சிஸ், படைப்பை நோக்கியபோதெல்லாம், அவர், கடவுளின் பிரசன்னத்தையே தியானித்தார் என்றுரைத்த கர்தினால் டர்க்சன் அவர்கள், உண்மையில், படைப்பு, நம் சகோதரர், சகோதரி என்றும், அப்புனிதர் கதிரவனை சகோதரர் என்றும்,  நிலவு, மற்றும், அன்னை பூமியை, சகோதரி என்றும் அழைத்தார் என தெரிவித்தார்.

உடன்பிறந்த உணர்வுகொண்ட (சகோதரர், சகோதரிகள்) அனைவருக்கும் இடையேயுள்ள உறவு, மனிதக் குடும்பத்திற்கும், படைப்பிற்கும் இடையேயுள்ள உறவில் பிரதிபலிக்கின்றது எனவும், படைப்பு நம் அனைவருக்கும் உரியது, எனவே, நாம் கொண்டிருக்கும் அனைத்தையும் பாதுகாக்க வேண்டும் எனவும், கர்தினால் டர்க்சன் அவர்கள், அந்த இணையதள கருத்தரங்கில் வலியுறுத்தினார்.

Laudato Sí  வாரம், மே 24, இஞ்ஞாயிறன்று நிறைவடைகின்றது. அதைத் தொடர்ந்து, Laudato Sí  சிறப்பு ஆண்டும் திருஅவையில் தொடங்குகிறது.

By admin