REUTERS2507992_Articoloநவ.30,2017. அன்பு இளையோரே, மியான்மாரில் என் பயணம் நிறைவுறும் வேளையில், இளையோராகிய உங்களுடன் சேர்ந்து இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். இளையோராகிய உங்களைக் காணும்போது, இன்றையத் திருப்பலியின் முதல் வாசகத்தில், புனித பவுல், உரோமையருக்கு எழுதிய சொற்கள் எனக்குள் எதிரொலிக்கின்றன: “நற்செய்தி அறிவிப்போரின் பாதங்கள் எத்துணை அழகாய் இருக்கின்றன” (உரோமையர் 10: 15. காண்க. எசாயா 52:7)

இளையோரே, நீங்கள் நற்செய்தியை அறிவிப்பவர்களாகவும், நற்செய்தியாகவும் வாழ்கிறீர்கள். இயேசு கிறிஸ்து, திருஅவை மீது கொண்டிருந்த மகிழ்வுக்கும், நம்பிக்கைக்கும் நீங்கள் உறுதியான அடையாளங்கள்.

நம்மைச் சுற்றி அதிகமான துன்பங்கள் நிகழும் வேளையில், நற்செய்தியைப்பற்றி எப்படி பேச இயலும் என்று ஒருசிலர் கேட்கின்றனர். இத்தனை அநீதி, வறுமை, அவலம் ஆகியவை சூழ்ந்திருக்கும்போது, நற்செய்தி எங்கே என்று கேட்கின்றனர். மியான்மார் நாட்டின் இளைஞரும், இளம் பெண்களும் நற்செய்தியை நம்புவதற்கு அஞ்சவில்லை என்பதை மக்கள் உணரவேண்டும். துன்புறும் இந்நாட்டு சகோதர, சகோதரிகளுக்கு நற்செய்தியைக் கொண்டுசெல்ல நீங்கள் தயாராக இருக்கிறீர்கள்.

நான் உங்கள்முன் ஒரு சவாலை வைக்க விரும்புகிறேன். இன்றைய முதல் வாசகத்தை நீங்கள் கவனமாகக் கேட்டிருந்தால், அங்கு, புனித பவுல் மூன்று கேள்விகளை விடுத்துள்ளார். அவற்றை நான் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

“தாங்கள் கேள்வியுறாத ஒருவர் மீது எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள்? அறிவிக்கப்படாத ஒன்றுபற்றி அவர்கள் எவ்வாறு கேள்வியுறுவார்கள்? அனுப்பப்படாமல் அவர்கள் எவ்வாறு அறிவிப்பார்கள்?” (உரோமையர் 10:14-15)

“தாங்கள் கேள்வியுறாத ஒருவர் மீது எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள்?” என்பது, புனித பவுலின் முதல் கேள்வி. இவ்வுலகில் ஒலிக்கும் பல்வேறு இரைச்சல்கள், இறைவனின் குரலை அடக்கிவிடுகின்றன. இந்த இரைச்சல்களுக்கு நடுவே, நேரிய உள்ளத்தினரின் வடிவில், நாம் இறைவனைக் காணமுடியும். எனவே, நீங்கள், நேரிய உள்ளத்துடன் இறைவனை வெளிப்படுத்தும் கருவிகளாக இருக்க, அவரது குரலுக்கு உங்கள் ஆழ்மனதில் செவி கொடுங்கள். அதே நேரம், இன்று நாம் கொண்டாடும் புனித அந்திரேயா உட்பட, பல புனிதர்களுக்கும் செவிகொடுங்கள்.

மீன்பிடிக்கும் தொழிலாளியான அந்திரேயா, புனிதராக, மறைசாட்சியாக உயிர் துறந்தார். ஆனால், அவர் தன் வாழ்வில் தவறுகள் செய்தார். இருப்பினும், அவற்றைவிட்டு விலகி, இயேசுவின் உண்மையானச் சீடராக மாறினார். நீங்களும் உங்கள் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள அஞ்சவேண்டாம். இயேசுவின் கரங்களில் உங்களை ஒப்படைக்க, புனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.

பவுலின் இரண்டாவது கேள்வி: “அறிவிப்பாளர் இல்லையெனில் இயேசுவைக் குறித்து எவ்வாறு கேள்வியுறுவார்கள்?” இளையோருக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு முக்கிய பணி, ‘மறைப்பணி சீடர்களாக’ வாழ்வது. நற்செய்தி, பொதுவாக, மிகச்சிறிய வகையில் ஆரம்பமாகிறது. எனவே, நீங்கள் நற்செய்தியை சக்திமிக்க வகையில் பறைசாற்றவேண்டும்! உங்கள் குரலை உயர்த்தி பறைசாற்றுவது அல்ல! உங்கள் வாழ்வின் வழியே பறைசாற்றவேண்டும்!

பவுலின் 3வது கேள்வி: “அனுப்பப்படாமல், மக்களுக்கு அறிவிப்பாளர்கள் எப்படி கிடைப்பர்?” இந்தத் திருப்பலியின் இறுதியில், நாம் அனைவரும் அனுப்பப்படுகிறோம். இந்த நாட்களில் நீங்கள் பெற்றுக்கொண்ட கொடையை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளச் செல்லுங்கள்.

இவ்வாறு அனுப்பப்படுதல், அச்சமூட்டலாம். இயேசு நம்மை எங்கு அனுப்புகிறார் என்பது தெரியாமலிருக்கலாம். ஆனால், அவர் நம்மை தனியே அனுப்புவதில்லை. அவரும் நம்முடன் நடந்து வருகிறார். நமக்கு முன் சென்று, வழிகாட்டுகிறார்.

புனித அந்திரேயாவையும், அவரது சகோதரர் பேதுருவையும் இயேசு அழைக்கும்போது, “என் பின்னே வாருங்கள்” (மத்தேயு 4:19) என்று சொல்வதை, இன்றைய நற்செய்தியில் நாம் வாசித்தோம். இயேசுவுக்கு முன்பாக வேகமாகச் செல்வதற்கல்ல; அவரைப் பின் தொடரவே நம்மை அழைக்கிறார்.

உங்களில் சிலரை அருள்பணியாளர்களாக, துறவிகளாக வாழ இயேசு அழைக்கலாம். வேறு சிலரை, திருமண வாழ்வில், அன்புநிறை தந்தையாக, தாயாக வாழ அழைக்கலாம். உங்கள் அழைத்தல் எதுவாக இருப்பினும், துணிவுடன், தாராள மனதுடன் வாழுங்கள்! அனைத்திற்கும் மேலாக, மகிழ்வுடன் வாழுங்கள்!

அமல அன்னை பேராலயத்தில் இருக்கும் நீங்கள், அன்னை மரியாவை உற்றுநோக்க உங்களை அழைக்கிறேன். வானதூதர் தந்த செய்திக்கு மரியா ‘ஆம்’ என்று சொன்னபோது, அவர், உங்களைப்போன்று இளவயதில் இருந்தார். இருப்பினும், நம்பிக்கையுடன், துணிவுடன், அந்தச் செய்திக்கு தன் வாழ்வு முழுவதையும் அர்ப்பணமாக்கினார். மரியாவைப்போல், நீங்கள் அனைவரும், மென்மையாக, அதே வேளையில், துணிவாக, இயேசுவை இவ்வுலகிற்குக் கொண்டுசெல்லுங்கள்.

உங்கள் அனைவரையும் மிகுந்த அன்போடு, அன்னை மரியாவிடம் ஒப்படைக்கிறேன்! எனக்காக செபிக்க மறவாதீர்கள்! மியான்மாரை இறைவன் ஆசீர்வதிப்பாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

By admin