REUTERS2539466_Articoloடிச.23,2017. “கிறிஸ்மஸை உண்மையிலேயே நாம் கொண்டாட விரும்பினால், புதிதாகப் பிறந்திருக்கும் குழந்தையின் வலுவற்ற எளிமையின் திருவுருவைத் தியானிப்போம். அங்கே இறைவன் இருக்கின்றார்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்சனிக்கிழமையன்று வெளியாயின.

மேலும், இச்சனிக்கிழமையன்று, திருப்பீடத்தின் பல்வேறு துறைகளுக்கு, உறுப்பினர்களை நியமித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத்தின் ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவையின் உறுப்பினராக, பங்களாதேஷ் நாட்டின் டாக்கா பேராயர் கர்தினால் பாட்ரிக் டி’ரொசாரியோ அவர்களை நியமித்துள்ளார்.

இன்னும், இவ்வெள்ளியன்று தனது 70வது பிறந்த நாளைச் சிறப்பித்த, இத்தாலியின் அல்பானோ மறைமாவட்ட ஆயர் மர்ச்செல்லோ செமெராரோ அவர்களுக்கு, நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வெள்ளி பகல் 1.30 மணிக்கு, ஆயர் செமெராரோ அவர்கள், ஆயர் இல்லத்தில் பணியாற்றும் அருள்பணியாளர்கள் மற்றும் பொதுநிலையினருடன் பிறந்த நாளைச் சிறப்பித்துக்கொண்டிருந்தவேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எவ்வித முன்னறிவிப்புமின்றி, திடீரென்று ஆயர் இல்லம் சென்று, ஆயரவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னார்.

இந்த ஆனந்த அதிர்ச்சி பற்றிக் குறிப்பிட்ட ஆயர் செமெராரோ அவர்கள், திருத்தந்தை தனக்கு ஏற்கனவே வாழ்த்தும், பரிசும் அனுப்பி விட்டார், ஆயினும் திருத்தந்தை நேரில் வந்து அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தியதை நினைத்து நன்றி சொல்கிறோம், அதேநேரம், திருத்தந்தைக்காக அதிகம் செபிக்கின்றோம் என்று கூறியுள்ளார்.

இவ்வெள்ளியன்று தனது எழுபதாவது பிறந்த நாளைச் சிறப்பித்த, ஆயர் செமெராரோ அவர்கள், திருப்பீட சீர்திருத்தப் பணியில் திருத்தந்தைக்கு உதவும் C9 கர்தினால்கள் அவையின் செயலராவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

By admin